12.4.12

தினம் ஒரு யோகா


நமது புத்தாண்டு

File:Hindu calendar 1871-72.jpg
இந்திய நாள்காட்டி முறைகளின்படி ஆங்கிலமாதங்களான ஏப்ரல்-மே மாதவாக்கில் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நாம் காலத்தை அளவிட நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட முறை, சூரியனின் நிலைகளை அடிப்படையாகக்கொண்ட முறை, நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொண்ட முறை மற்றும் வியாழன் கிரகத்தின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட முறை என்று பலவிதமான கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்திவருகிறோம்.

நமது நாட்காட்டிகள் பொதுவாக நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொள்ளும் கணக்கீட்டுமுறையையே பின்பற்றுகின்றன அவற்றில் இராசிகளே மாதங்களைக் குறிக்கப் பயன்படுகின்றன.

நம்நாட்டின் சில பகுதிகளில் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் வானில் இருக்கும் நிலைகளை அடையாளமாகக் கொள்கின்றனர் அம்முறைக்கு சௌரமனம் எனப்பெயர்.

சில பகுதிகளில் சந்திரன் மற்றும் இராசிகளை அடையாளமாகக் கொள்கின்றனர் இம்முறையில் மாதத்துவக்கமானது வளர்பிறை மற்றும் தேய்பிறையையும் சூரியன் ராசிமண்டலங்களில் சஞ்சரிக்கும் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இம்முறைக்கு சந்திரமனம் என்று பெயர்.

கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநில மக்கள் சந்திரமன முறையைப் பின்பற்றுவதால் அமாவாசை முடிந்ததும் புது நிலவு தெரியும் முதல் நாளை வருட ஆரம்பத்திற்கான நாளாக வைத்துள்ளனர்.


சௌரமன முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநில மக்கள் சூரியன் மேஷ ராசியைக்கடக்கும் காலத்தை புத்தாண்டாகக் கணக்கிடுகின்றனர்.

வருடகணக்கைப் பொருத்த அளவில் வியாழனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட 60 வருட கால சுழற்சி முறையையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த 60 வருடங்களும் அவற்றின் தனிப்பட்ட தன்மைகளைக் குறிக்கக்கூடிய தனிப்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த 60 வருட சுற்றுமுடிந்ததும் வரும் 61 ஆவது வருடம் 60 வருடங்களின் பெயர்களில் முதலில் உள்ள வருடத்தின் பெயரையே பெறும்.

சூரியன், சந்திரன், பூமி, வியாழன், மற்றும் சனி கிரகங்களின் நிலையின் அடிப்படையிலேயே இந்த 60 வருட சுழற்சி கணக்கிடப்படுகிறது. பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் ஆகும் அதேசமயம் வியாழன் சூரியனை சுற்றிவர

12 வருடங்களையும், சனிகிரகம் 20 வருடங்களையும் எடுத்துக் கொள்கின்றன. பூமி, சந்திரன், சூரியன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில்வர 60 வருடங்களை எடுத்துக்கொள்கின்றன.

இந்த 60 வருட சுழற்சி மனவ யுகம் என அழைக்கப்படுகிறது ஏனென்றால் ஒருமனிதனின் முதன்மை ஆயுள் 60 வருடங்கள் எனக் கருதப்படுகிறது. மனிதன்,பூமி,சந்திரன், சூரியன்,வியாழன், சனி ஆகியவற்றிற்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதால் இது யுகம் என அழைக்கப்படுகிறது.

யுகம் என்பது "யுக்" எனும் வார்த்தையிலிருந்து உருவானது "யுக்" என்றால் ஒருங்கிணைதல் என்று பொருள். யுகாதி என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். இங்கு யுக அல்லது ஒருங்கிணைப்பு என்பது பூமத்தியரேகை சூரியன்,சந்திரன்,மற்றும் சித்திரை ஆகியவற்றிற்கிடையே நிகழ்கிறது.
ஆகவே சந்திரமனம் முறைப்படி இக்காலம் யுகாதி எனப்படுகிறது.

சௌரமன முறையில் சூரியனின் சுழற்சி அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சூரியன் நில நடுக்கோட்டுக்கு நேராக இருக்கும் நாள் சம ராத்திரி நாளாகும். இந்த நாளுக்கு அடுத்து சூரியன் பூமியின் வடபகுதியை நோக்கி நகரத்தொடங்கும்

இந்தப் புள்ளியே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்துவோர் வருடப் பிறப்பாகக் குறிக்கும் புள்ளி ஆகும்.

பூமத்தியக்கோட்டை குறிக்கும் பழைய இந்திய பெயர் விஷ்வத்ருட்டரேகா (Visvadrutta Reha) அதன் பொருள் உலகை இரு சமபாகமாகப் பிரிப்பது என்பது ஆகும். எனவே விசு என்பதன் பொருள் சரிபாதி, இதன் அடிப்படையில் கொண்டாடப்படும் புத்தான்டு நாள் விசு எனப்படுகிறது.

சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து இவ்வாறுதான் காலம் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது சமநாள் என்பது நாம் புத்தாண்டு கொண்டாடும் ஏப்ரல் மத்தியிலிருந்து மார்ச் இறுதிக்கு முன்னேறிவிட்டது.
பூமி தனது அச்சில் சாய்வாக சுழலும் விதமே இதற்குக் காரணமாகும். இதை சரி செய்ய 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் சரிசெய்யப்பட வேண்டும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வரை அதாவது வராகமிகிரரின் காலம்வரை இவ்வாறு முறையாக நாட்கள் சரிகட்டப்பட்டு வந்தன. அதன்பிறகு அதற்கு நாம் கவனம் கொடுக்காததால் இந்த வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.

விடுதலைக்குப்பின் தற்போது இக்குறைபாடு சரிசெய்யப்பட்டு இந்திய அரசின் ஆவணங்களில் மார்ச் 22 நமது புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

நமது பழம்பெருமையை உணர்ந்து அறிவியல்பூர்வமான இப்புத்தாண்டு முறையை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.

நன்றி : திரு.D.K.ஹரி மற்றும் ஹேமாஹரி,www.bharathgyan.com