ஆனால் கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர் என்று சொன்னால் அவர் படைக்கப்பட்ட அந்த பொருளுக்குள்ளும் இருக்க வேண்டும். எங்கும் நிறைந்தது என்று ஒன்று சொல்லப்படும்போது அதை விட்டு வெளியில் வேறொன்று இருப்பதற்கான இடம் எங்கே இருக்கின்றது?
நான் அனைத்து சக்திகளையும் உடையவன் என்றால், என்னைவிட சக்தி வாய்ந்த ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. படைப்பு, படைப்பாளி என்பவை இருவேறு பொருட்கள் இல்லை. இருப்பது ஒரே பொருள்தான். இதனை எப்படி புரிந்து கொள்வது? நடனம், நடனமாடுபவர் என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டால், நடனமாடுபவரிடமிருந்து நடனத்தைப் பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நடனம் பார்க்கவேண்டுமென்றால் நடனமாடுபவரின் மூலமாகத்தான் பார்க்க முடியும்.
ஒரு ஓவியனும் அவன் வரைந்த ஓவியமும் வெவ்வேறானவை. ஒரு ஓவியன் ஒரு ஓவியத்தை வரைந்துவிட்டு அங்கிருந்து சென்று விடலாம். அப்பொழுதும் அந்த ஓவியம் அதே இடத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு நாட்டியக்காரர் நாட்டியத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது. எனவே படைப்பு , படைப்பவன் என்பது நடனம், நடனமாடுபவர் போன்றது கடவுள் அல்லது அன்பு அல்லது ஒளி என்று நம்மால் அழைக்கப்படும் சக்தி இந்த வையகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் ஊடுருவி உள்ளது.இதுவே நம் பண்டைய ஞானத்தின் சாரம் ஆகும். நவீன அறிவியல் விளக்குவதும் அதையே தான். இந்த உலகம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது. இந்த உண்மை தத்துவ ஞானிகளின் பற்பல புதிர்களுக்கு தீர்வளிக்கும். - குருஜி