இந்தியாவின் பண்டைய ரிஷிகளால் உருவாக்கப்பட்ட இயற்கை சார்ந்த புனிதமான மருத்துவ முறை ஆயுர்வேதா. வாழ்வதற்கான அறிவியல் என்பதுதான் “ஆயுர்வேதா” எனும் பதத்தின் பொருள் (சமஸ்கிருதத்தில் ஆயுர் என்றால்,”நீண்ட ஆயுள்” அல்லது “வாழ்க்கை”.வேதா என்றால் “அறிவியல்”)
மற்ற மருத்துவ முறைகள், நோயைச் சமாளிக்கும் முறைகளில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் ஆயுர்வேதா, நோய்கள் வராமல்காக்கும் முறைகளைப் பற்றிய அறிவை வழங்குவதோடல்லாமல், ஒருவேளை நோய் கண்டுவிட்டால் அதற்கான மூலகாரணத்தைக் கண்டுபிடித்து, முற்றிலுமாக அதை குணப்படுத்துவதற்கான வழியையும் வழங்குகிறது.
அடிப்படைத் தத்துவம்
சரக சம்ஹிதா, சுஸ்ருத சம்ஹிதா, அஸ்டங்க ஹிருதயம், போன்ற ஆயுர்வேத நூல்கள் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு தொகுக்கப்பட்டன, அதுவறை இந்த ஞானம் வழிவழியாக ரிஷிகளால் அவர்களது மாணவர்களுக்கு வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்தது.
இப் பிரபஞ்சத்தில் காணப்படும் பஞ்ச பூதங்களான, பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றால் நமது உடல் ஆக்கப்பட்டிருப்பதையும், இவை ஒருவரது உடலில் ஏற்படுத்தும் தாக்கங்களையும், இவற்றின் சமநிலை பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளையும் இந்நூல்கள் விளக்குகின்றன.
இந்த பஞ்சபூதங்களின் தனிப்பட்ட விதத்திலான கலவையால்தான் ஒவ்வொரு தனிமனிதனின் உடலும் ஆக்கப்பட்டுள்ளது. இக்கலவையானது மனிதருக்கு மனிதர் வேறுபடக் கூடியது. இந்த பஞ்சபூதங்களின் கூட்டமைப்பில் ஏதாவது ஒன்று மற்றவற்றைவிட அதிகமாக ஒவ்வொருவரின் உடலிலும் ஆதிக்கம் செலுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். இதை பிரகிருதி என ஆயுர்வேதம் கூறுகிறது.
மூன்றுவிதமாக இந்த பஞ்சபூதங்களின் கூட்டமைப்பு அமைவதாக கூறும் ஆயுர்வேதம் அவற்றிற்கு தோஷங்கள் எனப் பெயறிட்டுள்ளது.
அவை
வாத தோஷம் – காற்றும்,ஆகாயமும் ஆதிக்கம் செலுத்தக்கூடியது.
பித்த தோஷம் – நெருப்பு ஆதிக்கம் செலுத்தக்கூடியது
கப தோஷம் – நிலமும் நீரும் ஆதிக்கம் செலுத்தக் கூடியது
ஒருவரது உருவ அமைப்பையும், உடலின் செயல்பாடுகள் (உ-ம் ஜீரணம்), மனநிலை, உணர்ச்சிகள் ஆகியவற்றையும் இந்த தோஷங்களே நிர்ணயம் செய்கின்றன. உதாரணமாக கப தோஷ பிரகிருதி உடையவர்கள்,உறுதியான உடலமைப்பு, மெதுவாக செரிக்கும் தன்மை, சிறந்த ஞாபகசக்தி, உணர்ச்சிகளில் சமநிலை ஆகிய தன்மைகளைப் பெற்றிருப்பார்கள். பெரும்பாலானவர்களின் பிரகிருதி, இரண்டுவித தோஷங்களின் கூட்டமைப்பாகத்தான் இருக்கும்.
உடலில் ஏற்படும் நோய்களுக்குக் காரணம் இந்த தோஷங்களின் மாறுபாடுதான் என ஆயுர்வேதம் கூறுகிறது நமது உடலின் தோஷ கட்டமைப்பை அறிவதன் மூலம் அவற்றில் சமநிலையைப் பேணி உடல் நலனைக் காத்துக்கொள்ளமுடியும்.
“நாடி பரிக்ஷா” எனும் அற்புதமான முறையை ஆயுர்வேதம் நமக்கு அளித்துள்ளது. ஒருவரது மணிக்கட்டைப் பிடித்துப் பார்ப்பதன் மூலம் அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் தோஷமாறுபாட்டை ஆயுர்வேத மருத்துவரால் கண்டுபிடிக்கமுடியும். அதன் அடிப்படையில் வழங்கப்படும் சிகிச்சை நோயை முழுமையாக குணப்படுதக்கூடியதாக இருக்கும்.
ஆயுர்வேத வாழ்க்கை முறை
மருத்துவமுறை என்பதற்கு மேலாக அயுர்வேதம் நமக்கு அளிப்பது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகும். வரும் முன் காப்பதே இதன் நோக்கம். ஒருவரது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஆயுர்வேதம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆரோக்கியத்தைப் பேண நமது உடலின் தன்மைக்கும், சுற்றுப்புரம் மற்றும் காலநிலைக்கும் தக்கபடி நாம் சாப்பிடக்கூடிய அல்லது தவிர்க்க வேண்டிய உணவுவகைகளையும், கடைபிடிக்கவேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய பழக்க வழக்கங்களையும் (பத்தியம்), ஆயுர்வேத நாடிபரிக்ஷா மூலம் நாம் அறிந்துகொண்டு பயன்பெறலாம்.
சிகிச்சை முறைகள்
பொதுவாக கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒரு சிகிச்சைமுறை, நோய்க்குத் தக்கபடி மேற்கொள்ளப்படும்
· பஞ்சகர்மா – மூலிகை மருத்துவம், எளிய உணவு, எளிமையான உடற்பயிற்சி, உடலைப் பிடித்துவிடக்கூடிய சிகிச்சை, மற்றும் உடலை சுத்தமாக்கும் செயல்முறைகள் அடங்கிய சிகிச்சை முறை
· உடலில் காணப்படும் தொஷங்களின் மறுபடுகளைச் சீர்செய்யக்கூடிய மூலிகை மருந்து சிகிச்சை
ஆயுர்வேதம் பக்கவிளைவுகள் இல்லாத, ஒரு அற்புதமான மருத்துவ முறை ஆகும். இத்தகைய அற்புதமான முறையை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்காக பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உருவாக்கியது ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேதா, மேலும் அறிய கீழ்காணும் பெயர்மீது க்ளிக் செய்யவும்