12.10.11

அஷ்டாங்க யோகம் ஒரு அறிமுகம்


பொதுவாக தியானம் என்பது துறவிகளும், உலகவாழ்வில் பற்றில்லாதவர்களும், வயதானவர்களும் பயிலக்கூடியது எனும் கருத்து பரவலாக நிலவுகிறது. மேலும் தியானம் பயில்வதற்கு சிரமமானது எனும் கருத்தும் நிலவுகிறது. உண்மையில் தியானம், அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்காக,எளிமையாகப் பயிலக்கூடிய விதத்தில் ஞானியர்களாலும் யோகியர்களாலும் வடிவமைத்து தரப்பட்டுள்ளது.

எல்லாக் காலங்களிலுமே தியானம் நம்நாட்டில் அனைவராலும் இறைவழிபாட்டோடு இணைத்து கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபங்களெல்லாம் அதையே உணர்த்துவனவாக அமைந்துள்ளன, கோவிலில் இறை தரிசனம் முடிந்ததும் சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்துவிட்டு செல்லும் வழக்கம் இதன் அடிப்படையில் தோன்றியதே ஆகும், இதை நாம் உணராமல் தியான மண்டபத்தை உணவுக்கூடமாக்கியதோடல்லாமல் அமைதியாக அமர்ந்து செல்வதையும் சடங்காக மாற்றி விட்டோம்.

ஒருவர் வாழ்க்கையை நல்லாவிதமாகவாழ முதலில் நம்மை அடுத்து இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களிடம் நல்லவிதமான தொடர்பில் நாம் இருக்க வேண்டும், அடுத்து உறவினர்கள்,நண்பர்கள்,பிறகு சமுதாயம் என வரிசையாக நமது தொடர்பு எல்லை விரிந்து கொண்டே செல்கிறது ,இந்த அனைத்து உறவுகளையும் நாம் முறையாகப் பாராமரிக்க வேண்டும். யார் ஒருவர் இதை செம்மையாக செய்கிறாரோ அவரே வெற்றிகரமான மனிதராகிறார்.

இப்படி வெளிஉலகில் தொடர்புகளை பராமரிக்கும் செயல்முறையில் நாம் கடமை தவறி விடக்கூடாது ,தவறிழைத்துவிடக்கூடாது, அனைத்துக்கும் மேல் நாம் நமது ஆனந்தத்தையும் மன அமைதியையும் இழந்து விடக்கூடாது. இதுதான் இன்றைய வாழ்க்கைகயில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். இச்சவாலை சமாளித்து வெற்றிபெற அமைதியான மனமும், கூர்மையான புத்தியும் வேண்டும்.இவை இரண்டும் நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் வாய்க்கும்.

ஆக நல்வாழ்வு என்பது நலமான உடல், தெளிந்த புத்தி,அமைதியான மனம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இவற்றைப்பெற நமக்கு யோகம் வேண்டும்.

யோகம் என்பது என்ன ?
யோகம் தர்சனங்களுள் ஒன்று,ஆனந்த வாழ்வை அளிக்கக் கூடியது.
யோகம் என்பது கீழ்கண்ட அங்கங்களை உடையது.


  1. இயமம்
  2. நியமம்
  3. ஆசனம்
  4. பிராணாயாமம்
  5. பிரத்யாகாரம்
  6. தாரணை
  7. தியானம்
  8. சமாதி

இதில் முதல் இரண்டும் புலனடக்கம்,மனக்கட்டுப்பாடு குறித்தவை.ஆசனம்,பிராணாயாமம்,ஆகியன பயிலக்கூடிய பயிற்சிகள்.பிரத்யாகாரம்,என்பது புலன்கள் அடங்குவது. தாரணை என்பது மனம் ஒருமுகப்படும் நிலை.தியானம் என்பது விழிப்புடன் கூடிய ஓய்வு.தியானத்தின் பயன் சமாதி,அதுதான் முழுமை,வார்த்தைகளால் விளக்கமுடியாத நிலை.

தியானம்பற்றி விவரமாக தெரிந்துகொள்ளவே இந்த விளக்கங்களெல்லாம் மற்றபடி இது ஒன்றும் சிக்கலான கடைபிடிப்பதற்கரிய விஷயம் அல்ல.
ஓரளவு புலனடக்கத்துடன், ஆசனங்களையும்,பிராணாயாமாவையும் பழகிவந்தால் சிறிது சிறிதாக முன்னேறி அனைவராலும் ஆனந்தமும் அமைதியும் பெற முடியும்.
இதன்பலன்


  • ஆரோக்கியமான உடல்
  • தெளிந்தமனம்
  • புத்திக்கூர்மை


உடல் மனம் புத்தி ஆகியன நன்றாக இருந்தால் வாழ்க்கை ஆனந்த மயமாகவும்,வெற்றிகரமானதாகவும் இருக்கும்.இதற்கும்மேலாக எதேனும் கிடைக்குமா? தொடர்ந்து பயின்று வாருங்கள் ஆச்சரியங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக